300 போதை மாத்திரை மெரினா அருகே பறிமுதல்
புளியந்தோப்பு:ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.டி.கே., சாலையில் அமைந்துள்ள கூரியர் அலுவலகத்திற்கு, மும்பையில் இருந்து பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் போதை மாத்திரைகள் உள்ளதாகவும் புளியந்தோப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று பார்சலை பெற்ற போலீசார், அதை 'ஆர்டர்' செய்தவரின் மொபைல் போனிற்கு தொடர்பு கொண்டு, பார்சல் டெலிவரி செய்ய வந்துள்ளதாகவும், விவேகானந்தர் இல்லம் பின்புறம் வந்து பார்சலை பெற்றுக் செல்லுமாறும் கூறியுள்ளனர்.அதனை நம்பி, பார்சலை வாங்க வந்த இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், திருவல்லிக்கேணி, வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த சரத், 24, வீரமணி, 23, என தெரிந்தது. ரவுடியாக வலம் வரும் சரத் மீது ஏழு வழக்குகளும், வீரமணி மீது இரண்டு வழக்குகளும் உள்ளன.விசாரணையில், இவர்களது நண்பரான லோகேஷ் என்பவர் 'இந்தியா மார்ட்' செயலி வாயிலாக, கடந்த டிச., 27ம் தேதி போதை மாத்திரைகளை ஆர்டர் செய்ததும், தற்போது அவர் சபரிமலையில் இருப்பதும் தெரிந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், 300 போதை மாத்திரையும், 19,500 ரூபாயையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.