உண்டியலை உடைத்து திருடிய 4 பேர் கைது
பூந்தமல்லி,பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் கிராமத்தில், கற்பக விநாயகர், செல்வவிநாயகர், முத்துமாரியம்மன் கோவில்கள் தனித்தனியே அமைந்துள்ளன.இந்த கோவில்களில் உள்ள உண்டியல்களை, மர்ம நபர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் இரவு உடைத்து, அதில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.இதைப் பார்த்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பணியில் ரோந்து சென்ற நசரத்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதிவாசிகளுடன் சேர்ந்து நான்கு பேரையும் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், பிடிபட்டோர் கோயம்பேட்டை சேர்ந்த சஞ்சய், 19, மதுரவாயலை சேர்ந்த சூர்யா, 19, விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், 19, அர்ச்சுணன், 21, என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.நான்கு பேரையும், நசரத்பேட்டை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.