உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, ஹரிதரன், அப்பு என்ற விஜய் மற்றும் திருமலை ஆகிய நான்கு பேரையும், நிபந்தனையுடன் கூடிய ஜாமினில் விடுவித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரபல ரவுடி திருவேங்கடம் உட்பட பலரை கைதுச் செய்தனர். வழக்கில், செம்பியம் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, 2025 செப்., 9ம் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற புலன் விசாரணைக்காக, வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு, கடந்த ஆக., 6ம் தேதி மறுபதிவுச் செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ரவுடி பொன்னை பாலு, ஹரிதரன், அப்பு என்கிற விஜய் மற்றும் திருமலை ஆகியோர் ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், ஸ்ரீதர், ‘செம்பியம் போலீசாரின் குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், வழக்கு தற்போதும் எப்.ஐ.ஆர்., நிலையில் தான் உள்ளது. இதனால் விசாரணை முடிய காலதாமதமாகும். ஏற்கனவே, மனுதாரர் நான்கு பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர் கைதான நாளில் இருந்து, 90 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில், காலக்கெடு முடிந்துவிட்டதால் அவர்கள் கட்டாய ஜாமின் பெற தகுதியானவர்கள்’ என, வாதிட்டார். இதை பரிசீலித்த நீதிபதி, நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவர்கள் தலா 10,000 ரூபாய்க்கான பிணைத் தொகை மற்றும் இரு நபர் உத்தரவாதமும் வழக்க வேண்டும் மேலும், தினசரி காலை 10:00 மணிக்கு, சி.பி.ஐ., முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி