மொத்த பணியாளர்களில் 43 இடம் காலி : திணறுது ஆவடி அரசு மருத்துவமனை
ஆவடி அரசு மருத்துவமனையில் டாக்டர், மருத்துவ பணியாளர்கள் என, மொத்தமுள்ள 70 பணியிடங்களில், 27 பேர் மட்டுமே பணியில் உள்ளதால், மருத்துவ சேவை பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், மீதமுள்ள 43 பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆவடி அரசு மருத்துவமனை, 2010ல் கட்டப்பட்டது. மகப்பேறு பிரிவுடன், 57 படுக்கைகள், புறநோயாளிகள் பிரிவு மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. கர்ப்பிணியர், குழந்தைகள் உட்பட தினமும், 700 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால், திருவள்ளூர் மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு, நோயாளிகள் அலையும் நிலை இருந்தது.ஆவடியில் இருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை, 25 கி.மீ., துாரத்திலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, 22 கி.மீ., துாரத்திலும் உள்ளதால், ஆவடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென, அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.ரூ.45 கோடிஇந்த கோரிக்கையை ஏற்று, 1.79 ஏக்கர் பரப்பில், 54,235 சதுர அடியில் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், 45 கோடி ரூபாய் செலவில், 2021 மே மாதம், மூன்று தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.இம்மருத்துவமனையில், 5.85 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ஒரே நேரத்தில் 26 நபர்கள் செல்லக்கூடிய இரண்டு மின்துாக்கிகள், அனைத்து தளத்திலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில் டாக்டர், செவிலியர் உள்பட 70 பணியாளர்களை அமர்த்த திட்டமிடப்பட்டது.மேலும், தீயணைப்பு உபகரணங்கள், 250 கிலோ வோல்ட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள், வாகன நிறுத்த வசதி மற்றும் பிரேத பரிசோதனை கூடம் வசதிகளும் உள்ளன.கடந்த மார்ச் 15ம் தேதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், காணொலி காட்சி வாயிலாக இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.போதிய பணியாளர்களின்றி அவசர கதியில், இம்மருத்துவமனை திறக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகியும், இன்று வரை போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. கோரிக்கைஇதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.தற்போது முதன்மை மருத்துவ அலுவலர், சித்தா மருத்துவர், பல் மருத்துவர், செவிலியர் உட்பட 27 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.பணியாளர்கள் பற்றாக்குறையால், இரண்டாவது தளம் மற்றும் மூன்றாவது தளம் முழுமையாக இயங்கவில்லை. குறிப்பாக, இரண்டாவது தளத்தில் உள்ள ரத்த வங்கி, மூன்றாம் தளத்தில் உள்ள இரண்டு அறுவை சிகிச்சை அரங்கங்கள் -இயங்காமல், பயனற்று உள்ளன.இதுகுறித்து, திருவள்ளூர் சுகாதார இணை இயக்குனருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், கூடுதல் டாக்டர்கள் மற்றும் போதுமான பணியாளர்களை உடனடியாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.அரசு அறிவித்த பணியாளர்களுடன், கூடுதலாக மூன்று மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பிரேத பரிசோதனை மையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் வழக்கம் போல், சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளை தேடிச் செல்லும் அவலம் நீடிக்கிறது.- தரணிதரன்,சமூக ஆர்வலர். காலி பணியிடங்கள்மருத்துவர்கள் 2செவிலியர் 10 ரேடியோகிராபர் 1ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் 4 ஆய்வக பணியாளர் 1மருந்தாளர் 1தட்டச்சர் 3ஜூனியர் அசிஸ்டென்ட் 1மருத்துவமனை ஊழியர்கள் -20மொத்தம் 43 பணியாளர்கள்- நமது நிருபர் -