மேலும் செய்திகள்
செல்ல பிராணிகள் பதிவு ஆர்வம் காட்டிய மக்கள்
24-Nov-2025
சென்னை: சென்னை மாநகராட்சியில், பதிவு செய்து உரிமம் பெறாத 47,930 செல்ல பிராணிகளுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து, உரிமம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில், நாய்களுக்கு முறையாக தடுப்பூசி, ஒட்டுண்ணி நீக்காததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளர்ப்பு நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. வளர்க்க முடியாமல் பலர், அவற்றை சாலையில் விடுகின்றனர். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, அனைத்து செல்ல பிராணிகளையும் பதிவு செய்வது கட்டாயம் என, மாநகராட்சி தெரிவித்தது. அவ்வாறு பதிவு, உரிமம் பெறும் நாய்களுக்கு அக்., 8ம் தேதி முதல், 'மைக்ரோ சிப்' பொருத்தும் பணி நடைபெற்றது. இதற்காக, மாநகராட்சி இனக்கட்டுப்பாட்டு மையங்கள், கால்நடை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. நேற்று நடந்த கடைசி முகாமில், 2,930 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டன. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி இணையதளத்தில், 1,05,556 செல்லப் பிராணிகளின் விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடைசி முகாம் நாள் வரை, 57,626 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கி மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 47,930 பதிவு செய்த செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறவில்லை. போதிய காலவகாசம் வழங்கியும் உரிமம் பெறாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து, உரிமம் வழங்க முடிவு செய்துள்ளோம். எனவே, இன்று முதல் சாலையில் அழைத்து வரும் செல்லப்பிராணிகள் உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதை, மாநகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பர். அதேபோல், உரிமம் பெறாத நபர்களின் வீடுகளுக்கும் சென்று உரிமம் பெற அறிவுறுத்தப்படும். தொடர்ந்து அலட்சியம் காட்டினால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
24-Nov-2025