திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், கலைஞர் நகர், ராஜா சண்முகம் நகர், பூம்புகார் நகர், சிவசக்தி நகர், கலைவாணர் நகர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகர்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள், கிழக்கின் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்ல, அம்பேத்கர் நகர் - மாணிக்கம் நகர் இணைப்பு சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.மெட்ரோ ரயில் நிறுத்தம், கல்வி நிலையங்களுக்கு இந்த சுரங்கப்பாதை நேர் எதிரில் இருப்பதால், காலை மற்றும் மாலை வேளைகளில், மக்கள் கூட்டம் காரணமாக சுரங்கப்பாதை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.இந்நிலையில், மிக்ஜாம் புயலின் போது, சுரங்கப்பாதையில், நான்கு நாட்களுக்கும் மேலாக, ஐந்தடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. இயல்பு நிலை திரும்பியதும், மழைநீர் மின்மோட்டார் வழியாக வெளியேற்றப்பட்டது.அப்போது, மாணிக்கம் நகரில் இருந்து இறங்கும் சுரங்கப்பாதையின் வழியில், தரைத்தள கான்கிரீட் பூச்சு மேலேழும்பி, வெடிக்கும் அளவிற்கு அபாயகரமாக இருந்தது.இதனால், இரு சக்கர வாகனங்கள் துாக்கி வீசப்படும் நிலை இருந்தது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக, வெடிப்பை சரி செய்யும் விதமாக, அப்பகுதியில் இரும்பு பிளேட்டை போட்டு போக்குவரத்து சரி செய்தனர்.இந்நிலையில், போக்குவரத்து மிகுதி காரணமாக, தற்போது அந்த இரும்பு பிளேட்டும் கழன்று விட்டது. இதன் காரணமாக, வாகன போக்குவரத்து பெரும் சிக்கலாகி விட்டது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும், சுரங்கப்பாதையின் தரைத்தள வெடிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.