58ம் வள்ளலார் விழா சென்னையில் துவக்கம்
சென்னை, மயிலாப்பூரில் 58ம் ஆண்டு வள்ளலார் விழா நடந்தது. ராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏ.வி.எம்., அறக்கட்டளை இணைந்து, 58ம் ஆண்டு 'அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி' எனும் தலைப்பில் ஐந்து நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்., ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது: இறைவன் ஒருவன், அவன் நிரந்தரமானவன், அவன் இவ்வுலகை படைக்க காரணம் உள்ளது. அதில், ஒவ்வொரு உயிரும் சமமானவை. அதற்காக கூறப்பட்டது தான் சன்மார்க்கம். அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்டு, கருணையுடன் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இதில் அடங்கும். இவற்றை வகுத்த வள்ள லார் பிறந்து, வாழ்ந்த தேசத்தில் தான் மகாத்மா காந்தியும் வாழ்ந்து சென்றுள்ளார். இரண்டு பேரும் இறைவனாக போற்றப்படக் கூடியவர்கள். நாமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வழியில் நாமும் பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவ் விழா, 5ம் தேதி வரை நடக்கிறது. எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என பலர் பங்கேற்க உள்ளனர்.