உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூக்கில் ரத்தம் கசிந்து 6 வயது சிறுமி இறப்பு

மூக்கில் ரத்தம் கசிந்து 6 வயது சிறுமி இறப்பு

வடபழனி :ஈரோடில் இருந்து சென்னை வந்த 6 வயது சிறுமி, மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன், 32. ஜவுளி தொழில் செய்து வருகிறார். சமீபத்தில், கல்லீரல் அறுவை சிகிச்சை செய்த இவர், வடபழனி மன்னார் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் சஞ்சனா ஸ்ரீ, 6, ஈரோடில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படித்து வந்தார். இம்மாதம் 22ம் தேதி சஞ்சனா ஸ்ரீயின் பிறந்த நாள் என்பதால் அவரை, ஈரோடில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஊரில் இருந்து வரும்போது, சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அன்று இரவு மருந்து கொடுத்து, துாங்க வைத்தனர். நேற்று முன் தினம் காலை, சிறுமியின் வாய், மூக்கில் ரத்தம் கசிந்தது. இதையடுத்து சிறுமியை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர் பரிசோதனையில், சிறுமி ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வடபழனி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !