உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காட்டுப்பாக்கம் கோவில் அருகே 650 டன் குப்பை தேக்கம்

 காட்டுப்பாக்கம் கோவில் அருகே 650 டன் குப்பை தேக்கம்

சென்னை: 'காட்டுப்பாக்கம் கோவில் அருகே குவிந்துள்ள குப்பையில், 650 டன் இன்னும் அகற்றப்படவில்லை' என, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் மீது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில், பழமையான பூரிமரத்தவ முனீஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். காட்டுப்பாக்கம் ஊராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பை கழிவு, கோவிலின் பின்புறம் மதில் சுவற்றையொட்டி கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பை கழிவு மலை போல் குவிந்துள்ளது. கோவிலை சுற்றி துர்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். காட்டுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என, கடந்த ஏப்ரல் 21ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. தீர்ப்பாய உத்தரவுப்படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை: காட்டுப்பாக்கம் பூரிமரத்தவ முனீஸ்வரர் கோவில் பகுதியில், பல ஆயிரம் டன் குப்பை கொட்டப்பட்டு உள்ளது, கள ஆய்வில் கண்டறியப்பட்டது. உடனடியாக குப்பையை அகற்றும்படி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 60 சதவீத குப்பை அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள, 650 டன் குப்பை இன்னும் அகற்றப்படாதது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2016ஐ முழுமையாக பின்பற்ற வேண்டும். குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாகவும், மற்றவற்றை அதற்குரிய வழிகளில் அகற்ற வேண்டும். அதற்கான மையங்களை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை