நட்சத்திர ஹோட்டலில் மோதல் ரிசார்ட் ஓனர் உட்பட 8 பேர் கைது
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்திய, 'ஐடியல் பீச் ரிசார்ட்' உரிமையாளர் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட், 37. இவர் மாமல்லபுரத்தில் உள்ள 'ஐடியல் பீச் ரிசார்ட்' உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, தன் உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அருகே இருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கொளத்துாரைச் சேர்ந்த அரவிந்த், 36, என்பவர், பெண்ணிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகே மேஜையிலிருந்து பீர் பாட்டில்களை மாறி மாறி வீசி தாக்கிக் கொண்டனர். காயமடைந்த இரு தரப்பினரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினர் நடத்திய மோதல் சம்பவத்தால், ஹோட்டலில் கண்ணாடி பொருட்கள் உட்பட சில பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், வின்சென்ட் தரப்பில் ஐந்து பேர், அரவிந்த் தரப்பில் மூன்று பேர் என, எட்டு பேரை கைது செய்தனர்.