எம்.டி.சி.,யில் 7 மாதங்களில் 845 விபத்துகள்; 28 பேர் பலி
சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தில், ஏழு மாதங்களில், 845 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 28 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, 'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பேரவை நிர்வாகி அன்பழகன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அளித்துள்ள பதில்: கடந்த 2024 டிச., 21- முதல், கடந்த ஜூலை 25-ம் தேதி வரை, மாநகர பேருந்துகள் இயங்கிய வழித்தடத்தில், மொத்தம் 845 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் விபத்து தொடர்பாக, 21 வழக்குகள் நீதிமன்றத்தின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு ஜன., 1 முதல் ஜூலை 25-ம் தேதி வரை, தாழ்தள பேருந்துகள், 262 விபத்துகளில் சிக்கியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அன்பழகன் கூறியதாவது: மாநகர பேருந்துகளில் கதவை மூடி இயக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்தியது உள்ளிட்ட உத்தரவுகளால், மாநகர போக்குவரத்து கழகத்தில் விபத்துகள் சற்று குறைந்துள்ளன. அதே நேரம், கட்டுப்படுத்த முடியாத மக்கள் கூட்டம் வரும்போது, பேருந்துகளில் கதவை மூடி இயக்குவதில் நடைமுறை சிக்கலும் இருக்கிறது. சாலை விபத்துகளை குறைக்க, பேருந்துகளுக்கு தனி வழித்தடத்தை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.