உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்டவாளத்தில் கழற்றப்பட்ட போல்ட்

தண்டவாளத்தில் கழற்றப்பட்ட போல்ட்

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலையம் அருகே, கடந்த நான்கு நாட்களுக்கு முன், தண்டவாள இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு சிதறிக் கிடந்தன. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று பொன்னேரி -- அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில், நான்கு இடங்களில் பாதையை மாற்றி விடும் இணைப்பு பெட்டியின், 'போல்ட்'கள் கழற்றப்பட்டு உள்ளன.இதை தண்டவாளத்தில் ஜல்லி கற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், நேற்று அதிகாலையில் பார்த்தார். உடனடியாக, ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார். தண்டவாள பராமரிப்பாளர், இன்ஜினியர்களுக்கு நிலைய மேலாளர் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில், 'போல்ட்' கழற்றப்பட்ட இடங்களில், அவற்றை மீண்டும் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இந்த வழித்தடத்தில் இரண்டு மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சென்னை நோக்கி அதிகாலையில் வர வேண்டிய ஐந்து விரைவு ரயில்கள், இரண்டு மணி நேரம் வரை தாமதமாக வந்தன. போல்ட்கள் சரியாக இணைக்கப்பட்டு ஆய்வு செய்த பின்னரே, ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.ரயில்வே போலீஸ் எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில், டி.எஸ்.பி., கர்ணன் மற்றும் ரயில்வே போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில், இந்த போல்ட்களை மர்ம நபர்கள் கழற்றி இருப்பரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விசாரிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் கூறியதாவது: தண்டவாளத்தில் இணைப்பு பெட்டி ஒன்று இருக்கும். இது, ரயில் பாதையை மாற்றி விட பயன்படும். இந்த இணைப்பு பெட்டியில் இருக்கும் 'போல்ட்' கழற்றப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு போல்ட்கள் கழற்றப்பட்டதால் சிக்னல் செயல்படாது; ரயில் நின்று விடும். அதனால், ரயில் தடம் புரளும் சம்பவம் ஏற்படாது. ஆனாலும், ரயிலை கவிழ்க்கும் முயற்சியா என விசாரித்து வருகிறோம். 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்; ரோந்து பணியை அதிகரித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை