பலமுறை மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு நுரையீரல் ரத்த உறைவை அகற்றி சாதனை
குரோம்பேட்டை: பலமுறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், நோயாளியின் நுரையீரலில் இருந்த ரத்த உறைவை அகற்றி, ரேலா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த, 42 வயதுடைய ஒருவருக்கு, இடது காலில் ஏற்பட்ட காயத்தால், 'ஆழ் நரம்பு ரத்த உறைவு' பாதிப்பு ஏற்பட்டது. இப்பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாததால், அந்த உறைவு ரத்த ஓட்டத்தில் நகர்ந்து, நுரையீரலின் முக்கிய ரத்த குழாயை சென்றடைந்து, இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் செறிவான ரத்த ஓட்டத்தை தடை செய்திருந்தது. இதனால், அந்த நபருக்கு திடீரென கடும் மூச்சு திணறலும், நெஞ்சில் ஒரு வித உணர்வும் ஏற்பட்டதால், கு ரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் விரைவாக செயல்பட்டு, ஈ.சி.ஜி., - சி.டி., ஆஞ்சியோகிராம் மூலம், நுரையீரல் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். முதலில், ரத்த உறைவை கரைக்கும் மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டன. அம்மருந்துகளால் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில், நோயாளிக்கு மீண்டும் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், மிக ஆபத்தானதாகவும், அதிக சவாலானதாகவும் இருந்த போதிலும், 'மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி' என்ற சிகிச்சையை மேற்கொ ண்டு, அந்த நபரின் உயிரை காப்பாற்றி, ரேலா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.