உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழி ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை

வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழி ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை

அடையாறு, வழக்கறிஞர் கொலைக்கு பழிக்குப்பழியாக, ஜாமினில் வெளிவந்த நபரை மூன்று பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கொட்டிவாக்கம், இளங்கோவன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன், 45. நேற்று மாலை, வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட இவர், அடையாறு, இந்திரா நகர் 1வது அவென்யூவில் காரை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், அரிவாளால் குணசேகரனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடையாறு போலீசார் உடலை பரிசோதனைக்காக, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில், கடந்தாண்டு ஜூன் மாதம், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் வைத்து வழக்கறிஞர் கவுதம் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில், முதல் குற்றவாளி குணசேகரன். சிறை சென்ற இவர், சமீபத்தில் ஜாமினில் வெளி வந்தார். வழக்கறிஞர் கொலைக்கு பழிக்குப்பழியாக, குணசேகரன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ