100க்கும் மேற்பட்ட கார்கள் திருடிய பலே திருடன் புதுச்சேரியில் கைது
திருமங்கலம்,:நாடு முழுதும் 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் திருடிய 'பலே' திருடனை, சென்னை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அண்ணாநகர் மேற்கு, கதிரவன் காலனியைச் சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம், 55.கடந்த 10ம் தேதி, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது 'டொயோட்டா பார்ச்சூனர்' கார் திருடு போனது. கார் திருடப்படும் வீடியோ காட்சியோடு, திருமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆராய்ந்து விசாரித்தனர். இதில், காரை திருடியது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஷெகாவத், 45, என்பதும், எம்.பி.ஏ., பட்டதாரி என்பதும் தெரிய வந்தது. அவரை புதுச்சேரியில் வைத்து, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்தனர். இதில், திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாயின.விசாரணையில் தெரிய வந்ததாவது:சென்னையில் உள்ள ேஷாரூம்களில், சர்வீசிற்கு வரும் சொகுசு கார்களை நோட்டமிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி வாடிக்கையாளர் போல பேச்சு கொடுத்து, காரின் சேஸிங் எண் மற்றும் அதன் உரிமையாளர்களின் தகவலை திருடி வந்துள்ளார். மேலும், கார்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, கார் நிறுத்தப்படும் இடத்தை அறிந்து, கள்ளச்சாவி மூலம் கார்களை திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதேபோன்று தமிழகம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் கார்களை திருடி, ராஜஸ்தான் மாநிலம் எடுத்து சென்றது தெரியவந்தது.அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட கார்களை, அவர் திருடியுள்ளார். தமிழகத்தில் இருந்து மட்டும் 20க்கும் மேற்பட்ட கார்கள் திருடியுள்ளார். திருடிய கார்களை, நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பலுக்கு, விற்பனை செய்ததும், அவர்கள் நேபாளம் நாட்டவருக்கு விற்றதும் தெரிய வந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் கார் திருட முயலும்போது, சென்னை போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார்.போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.