தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு
ராயபுரம், ஆம் ஆத்மி கட்சி, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பில், கெஜ்ரிவால் மாடல் துவக்க விழா நிகழ்ச்சி, ராயபுரம், கிழக்கு கல்மண்டபம் சாலையில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், கட்சியின் வடசென்னை மாவட்ட செயலர் முகமது பாரூக் தலைமையில், கட்சியின் மாநில தலைவர் வசீகரன், தமிழக மேலிட பொறுப்பாளர் பங்கஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கஜ் சிங் கூறியதாவது: நாடு முழுதும் பரவியுள்ள ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது. அதனால், மாவட்டத்திற்கு ஒரு தொகுதியை, கெஜ்ரிவால் தொகுதியாக மாற்ற திட்டமிட்டு, முதற்கட்டமாக வடசென்னையில் ராயபுரம் தொகுதியை தேர்ந்தெடுத்து, அதற்கான பணிகளை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். வசீகரன் கூறுகையில், ''டில்லியை தொடர்ந்து பஞ்சாப், குஜராத் ஆகிய மாநில தேர்தலில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சி, தமிழக தேர்தலில் பங்கேற்க உள்ளது. டில்லியில் இலவச கல்வி, இலவச மருத்துவம், பெண்கள் இலவச பேருந்து பயணம் என்ற திட்டங்களை கெஜ்ரிவால் செயல்படுத்தினார். அந்த மாடல் தான், தமிழகத்தில் திராவிட மாடலாக உள்ளது,'' என்றார்.