உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவுநீர் லாரிகளால் தொடரும் விபத்து

நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவுநீர் லாரிகளால் தொடரும் விபத்து

நெசப்பாக்கம்:நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவுநீர் லாரிகளால் விபத்து ஏற்பட்டு வருவதால், லாரிகளை தடை செய்ய வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டலம், நெசப்பாக்கம் அண்ணா பிரதான சாலையில், குடிநீர் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.போரூர், குன்றத்துார், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர், லாரிகள் வாயிலாக எடுத்து வரப்பட்டு, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் விடப்படுகிறது.இந்த லாரிகள், மிகவும் குறுகலான ராமாபுரம் பிரதான சாலை, ஏரிக்கரை சாலை வழியாக நெசப்பாக்கம் வருகின்றன. காலை 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து வரும் லாரிகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 2006ல் ஏரிக்கரை தெருவில் கழிவுநீர் லாரி மோதி, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வி மற்றும் திவ்யா ஆகிய இருவர் உயிரிழந்தனர். கடந்த 2017ல் நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் சாலையோரம் நின்ற ரமேஷ், 30, என்பவர் மீது கழிவுநீர் லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கழிவுநீர் லாரியை தீயிட்டு கொளுத்தினர்.நெசப்பாக்கம் பகுதியில் கழிவுநீர் லாரிகளால் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதனால், அவ்வழியாக வழியாக கழிவுநீர் லாரி வருவது தடை செய்யப்பட்டது.இதையடுத்து லாரிகள், ஆற்காடு சாலை, ராஜமன்னார் சாலை, முனுசாமி சாலை வழியாக, நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று வந்தன.இந்நிலையில், ராமாபுரம் பிரதான சாலை, ஏரிக்கரை தெரு வழியாக, கழிவுநீர் லாரிகள் மீண்டும் இயக்கப்படுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.பெரம்பூரில் குடிநீர் லாரி ஏறி சிறுமி இறந்துள்ள நிலையில், அதுபோன்ற விபத்து இப்பகுதியில் நடக்காமல் இருக்க, ஏரிக்கரை தெரு வழியாக நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் லாரிகளை தடை செய்ய வேண்டும். மாறாக முனுசாமி சாலை வழியாக லாரிகளை இயக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை