மண்டல குழு தலைவரை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்
வளசரவாக்கம்,சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் தலைமையில், சமீபத்தில் மண்டல குழு கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., கவுன்சிலர் சத்தியநாதன் துாங்கிய வீடியோ வெளியானது. இந்நிலையில், மண்டல குழு தலைவர்தான், தன்னை வீடியோ எடுத்து அவதுாறு பரப்பி வருவதாகக்கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர் சத்தியநாதன், நேற்று, மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.பின், சத்தியநாதன் கூறியதாவது:அம்மா உணவக ஊழியர் ஒருவரை பற்றி, கவுன்சிலர் ஒருவர் தரைகுறைவாக பேசியதை எதிர்த்து, நான் கேள்வி எழுப்பினேன். அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால், தனிப்பட்ட முறையிலும் என்னை தவறாக சித்தரித்து, அவதுாறு பரப்புகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தை, ஒரு தனிநபர் ஆட்டிப்படைப்பதை, கமிஷனர் தடுத்து நிறுத்த வேண்டும்.கடந்த மூன்று ஆண்டுகளாக, வளசரவாக்கம் மண்டலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. மண்டல குழு கூட்டத்தில் நடைபெறும் உண்மைகள் தெரிய, செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.