தமிழக அரசிடம் 5வது முனையம் அமைக்க நிலம் கேட்குது விமான நிலைய ஆணையம்
சென்னை:'சென்னை விமான நிலையத்தில், இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள், 2026 மார்ச்சில் முடியும்' என, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.சென்னை விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சர்வதே முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து, உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில்,. விமான நிலைய வளர்ச்சி பணிகள், புதிய முனையங்களை உருவாக்குதல், விமான நிறுவனங்களின் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.முடிவில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சர்வதேச முனையமாக செயல்பட்டு வந்த இடம் இடிக்கப்பட்டு அங்கு, ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த முனையத்தின் புறப்பாடு பகுதியில், எட்டு நுழைவாயில்கள், 60 செக் - இன் கவுன்டர்கள், 10 பாதுகாப்பு எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரீமோட் போர்டிங் வாயில்கள், 8 ஏரோ பிரிட்ஜ் உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.வருகை பகுதியில், உடமைகளை கையாளும் பெல்ட்கள், பொருட்களை கண்டறியும் தானியிங்கி ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல வசதிகள் அமைய உள்ளது. விமான நிலையத்தில், ஆண்டுக்கு, 3.5 கோடி பயணியரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 'பீக்ஹவர்' நேரங்களில் தினமும், 12,000 பயணியர், 24 முதல் 25 விமான நகர்வுகள் உள்ளன. புது முனையங்களை மேம்படுத்தினால், இவை மேலும் அதிகரிக்கும்.பயணியருக்கு தேவையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, பாதுகாப்பு பகுதியில் கூடுதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அமல்படுத்துவது, இரண்டு மற்றும் நான்காவது முனையங்களை இணைக்கும் வகையில், காரிடார்களை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை, விமான நிறுவனங்கள், எங்களிடம் முன் வைத்துள்ளன. வருகை பகுதியில் உள்கட்டமைப்பை கூடுதலாக நவீனப்படுத்தவும் வரையரை செய்யப்பட்டுள்ளது. இந்த முனைய பணிகள் 2026 மார்ச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஒப்பந்ததார்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.தற்போது நடந்து வரும் முனையம் பணிகள் முடிந்ததும், ஐந்தாவது முனையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு போதுமான நிலம் எங்களிடம் உள்ளது. இருப்பினும், அதை சுற்றி மேம்பாலம் கட்ட, தமிழக அரசிடம் நிலம் கேட்க உள்ளோம். நிலம் கிடைத்தால், விமான நிலைய ஆணையம் சார்பில், மேம்பால சாலை அமைத்து கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.