உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்டெல் சேவை குறைபாடு வாடிக்கையாளருக்கு இழப்பீடு

ஏர்டெல் சேவை குறைபாடு வாடிக்கையாளருக்கு இழப்பீடு

சென்னை:புகாருக்கு உரிய விளக்கம் அளிக்காமல் சேவை குறைபாடாக நடந்த ஏர்டெல் நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:'ஏர்டெல்' நிறுவனத்தின் இணைய வசதியுடன் கூடிய, 'லேண்ட்லைன்' சேவையை, பயன்படுத்தி வருகிறேன்.கடந்தாண்டு ஆக., 7ல் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. புகார் அளித்ததும், இணைய சேவை சரிசெய்யப்பட்டது. அடுத்து ஓரிரு நாட்களில், மீண்டும் சேவை துண்டிக்கப்பட்டது. பல்வேறு முறைகளில் தொடர்ந்து புகார் அளித்தேன்.ஆனால், என் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இணைய சேவையை சரிசெய்யாமல், புகாரை முடித்து வைத்தனர். இதேபோல, பல முறை நான் அளித்த புகாரை முடித்து வைத்தனர். இணைய சேவை துண்டிப்புக்கு உரிய விளக்கமும் அளிக்கவில்லை.இது தொடர்பாக, மயிலாப்பூரில் உள்ள 'ஏர்டெல்' நிறுவன வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் மேல்முறையீடு அதிகாரி, குறைதீர் அதிகாரியிடமும் புகார் அளித்தேன்.பழுது புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்காமல், சேவை குறைபாடாக நடந்த ஏர்டெல் நிறுவனத்தின் செயலால் மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு, 4.50 லட்சம் ரூபாயும், வழக்கு செலவாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.பின் பிறப்பித்த உத்தரவு:நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்தான், இணைய சேவை துண்டிப்புக்கான காரணம், புகார்தாரருக்கு தெரியவந்துள்ளது. புகார் அளித்தும், அது குறித்து வாடிக்கையாளருக்கு நிறுவனம் தெரியப்படுத்தவில்லை.கடந்தாண்டு ஆக., 29 முதல் செப்., 6 வரை, ஒன்பது நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய துண்டிப்புக்கான காரணத்தை தெரியப்படுத்தவில்லை.நிறுவனத்தின் இந்த செயலால், வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேவை குறைபாடுக்கு 10,000 ரூபாயும் வழக்கு செலவாக 2,000 ரூபாயையும் புகார்தாரருக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ