| ADDED : நவ 25, 2025 04:25 AM
சென்னை: போலி ஆவணம் மூலம் நிலத்தை பதிவு செய்த, அம்பத்துார் சார் - பதிவாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சென்னை, அம்பத்துார் சார் பதிவாளராக பணிபுரிந்து வருபவர் ஜாபர் சாதிக். இவர், மாதவரத்தில் சார் - பதிவாளராக பணிபுரிந்தபோது, போலி ஆவணம் மூலம் நிலத்தை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, சென்னையைச் சேர்ந்த சதாசிவம் பிள்ளை, 73 என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, எட்வின் மோசஸ் என்பவர், புகார்தாரரின் மருமகனுக்கு சொந்தமான, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை கூட்டாளிகளுடன் அபகரித்தது தெரிய வந்தது. மேலும், நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய, சார் - பதிவாளர் ஜாபர் சாதிக் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ளது.