உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் இறுதிக்கட்டத்தில் பணிகள்

நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் இறுதிக்கட்டத்தில் பணிகள்

திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் முழுநேரக் கிளை நுாலகம் உள்ளது. கடந்த 1956ல், 18 சென்டில் பாடசாலையாக திறக்கப்பட்ட இந்த நுாலகத்தில், 8,605 உறுப்பினர்கள் மற்றும் 60,000 புத்தகங்கள் உள்ளன. தினமும், 250க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த நுாலகத்தில், 120 புத்தகங்கள் இரவல் வழங்கப்படுகின்றன.இதை, திருநின்றவூர், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, பாக்கம் மற்றும் அரண்வாயல் சுற்றுவட்டார பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் நுாலக இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பகுதியை, அளவீடு செய்து கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 1,900 சதுர அடி இடவசதி கொண்டுள்ள நுாலகத்தில், இலவச 'வை -- பை' மற்றும் 'ஸ்மார்ட் வகுப்பு' வசதியுடன் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. இதில், குழந்தைகளுக்கு தனிப்பிரிவு, செய்தித்தாள் பிரிவு, நுால் இரவல் பிரிவு, வாசகர்களுக்கு தனி இடம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அரசு தேர்வுக்கு பயிலும் மாணவ -மாணவியருக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்கு இலவச அடிப்படை கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பல மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

அதேநேரம், இடப்பற்றாக்குறையால் முதல் தளத்தில், 22 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில், 1,215 சதுர அடியில் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடியும் என தெரிகிறது. இப்பணிகள் முடிந்ததும், அரசு தேர்வுக்காக பயிலும் மாணவர்களுக்கு முதல் தளத்தில் இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், திருநின்றவூர் நகராட்சியின் பாதையில் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதை அகற்றி, பாதையை மீட்டு தர வேண்டும் என, ஏற்கனவே கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நகராட்சி நிர்வாகம், நுாலக இடத்தை பொது பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், நுாலகத்தை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு அகற்றி, அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி