திருநீர்மலையில் ரூ.2 கோடியில் அறிவுசார் மையம் அமைகிறது
திருநீர்மலை, தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலையில், மாணவர்களின் வசதிக்காக, இரண்டு கோடி ரூபாய் செலவில், அறிவுசார் மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. தாம்பரம் மாநகராட்சியில் சேலையூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை பரலி சு.நெல்லையப்பர் பள்ளி ஆகிய இடங்களில், 4.5 கோடி ரூபாய் செலவில், அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த மையங்களில், மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயில்கின்றனர். இங்கு அனைத்து வகையான நுால்கள், 'ஆன்லைன்' ஸ்மார்ட் கிளாஸ், காற்றோட்டமான சூழலில் அமர்ந்து படிக்கும் அறை, இலவச இணையதளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதேபோல், திருநீர்மலையிலும் இரண்டு கோடி ரூபாய் செலவில், அறிவுசார் மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. ஆறு மாதங்களில் இக்கட்டடம் கட்டி முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், திருநீர்மலையில், 88 லட்சம் ரூபாய் செலவில் வார்டு அலுவலகம் கட்டும் பணிக்கான பூஜையும் நேற்று நடந்தது.