உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு? கிடுக்கிப்பிடி மாநகராட்சி, மின் வாரியத்திடம் விளக்கம் கேட்குது ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகள் கைகோர்ப்பு? கிடுக்கிப்பிடி மாநகராட்சி, மின் வாரியத்திடம் விளக்கம் கேட்குது ஐகோர்ட்

சென்னை : 'நன்மங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், அவற்றை அகற்றாததில் இருந்து, ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுதாக தோன்றுகிறது' என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர், மின் வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

புகார்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட நன்மங்கலம் ஏரி, 116 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னைக்கு அருகில் உள்ள இந்த ஏரி, விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.ஆனால், 20 ஆண்டுகளில், இந்த ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து, வணிகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.நீர் நிலையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வருவாய் ஆவணங்கள் வாயிலாக உறுதி செய்தேன்.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளேன். முதல்வரின் தனிப்பிரிவிலும், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்துள்ளேன்.ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய மனுவுக்கு பதிலளித்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஒப்பு கொண்டனர். இருப்பினும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.இறுதியாக, நன்மங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, 2023 பிப்.,22ல் புகார் மனு அளித்தேன். அந்த புகார் மனுமீது, இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கடைசியாக அளித்த புகார் மனுவை பரிசீலித்து, நன்மங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலாஜி ஆஜராகி, ''ஏரியை ஆக்கிரமிப்பு பெரியளவில் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டங்களுக்கு, மின்சாரம், குடிநீர் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,'நன்மங்கலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் இருந்து, ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுவதாக கருதுகிறோம்' என, தெரிவித்தனர்.இதையடுத்து நீதிபதிகள், 'இந்த வழக்கில் நீர்வளத்துறை செயலர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின் வாரிய தலைவர் ஆகியோரை, எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.'நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை, 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ASIATIC RAMESH
ஜூன் 20, 2025 11:30

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்... ஹ.. ஹா... எப்படி என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்குகூட தெரியும்...


Mani . V
ஜூன் 20, 2025 06:51

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைகோர்ப்பு.


புதிய வீடியோ