மத்திய அரசு மாஜி அதிகாரியை மிரட்டி ரூ.88 லட்சம் பறித்த அசாம் நபர்கள் கைது
சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த மத்திய பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை, செப்., 9ம் தேதி மும்பை போலீஸ் அதிகாரி என, 'வாட்ஸாப்' வாயிலாக மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார்.'உங்கள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. நீங்கள், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்' என, கூறியுள்ளார்.பின், அந்த அழைப்பை, டிராய் என்ற இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகாரிக்கு இணைப்பதாக கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், வாட்ஸாப் வீடியோ அழைப்பில் வருமாறு உத்தரவிட்டுள்ளார். விபரம் சேகரிப்பு
அதன்படி தொடர்பு கொண்டதும், வங்கி கணக்கு, வீட்டு முகவரி, பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளார்.மோசடி செய்யப்பட்ட பணம், உங்கள் வங்கி இருப்பில் இருந்து எடுக்கவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புங்கள்.ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த பின், அந்த பணம் மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு, 88 லட்சம் ரூபாய் அனுப்பச் சொல்லி மோசடி செய்துள்ளார்.இது குறித்து, மத்திய அரசின் பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். புழல் சிறையில் அடைப்பு
அப்போது, மோசடி செய்த பணத்தில் 3.83 லட்சம் ரூபாய், ஒரே நாளில் அசாம் மாநிலத்தில் இருந்து, பல மாநிலங்களைச் சேர்ந்த, 178 வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இதையடுத்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அசாம் மாநிலத்தில் முகாமிட்டு, அதே மாநிலத்தைச் சேர்ந்த பார்த்தா பிரதிம் போரா, 38, என்பவரை, கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய துருபாஜோதி மஜீம்தார், 25, ஸ்வராஜ் பிரதான், 22, பிரசாந்த் கிரி, 21, பிரஞ்ரல் ஹசாரிகா, 28, ஆகிய நான்கு பேரை, 'சைபர் கிரைம்' போலீசார் கடந்த 28ம் தேதி கைது செய்துள்ளனர்.