வங்கியில் புகுந்து மேலாளருக்கு வெட்டு அட்டகாச வாலிபர் மாம்பலத்தில் கைது வஞ்சம் தீர்க்க 2 ஆண்டாக அலைந்ததாக வாக்குமூலம்
மாம்பலம்,தி.நகர், பர்கிட் சாலையில் எச்.டி.எப்.சி., வங்கி உள்ளது. இதன் மூத்த மேலாளராக, பொன்னியம்மன் மேடு, பிருந்தாவன் கார்டனைச் சேர்ந்த தினேஷ், 33, என்பவர் உள்ளார்.நேற்று மதியம், வங்கிக்கு வந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தினேஷை வெட்டினார்.இதில் அவருக்கு இடது காது மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த வாடிக்கையாளர்கள், மர்ம நபரை பிடித்து மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயம் அடைந்த தினேஷை, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பிடிபட்ட மர்ம நபர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், 34, என்பது தெரியவந்தது. சதீஷை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:சதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அண்ணா சாலையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியில், ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். அப்போது, மன அழுத்தம் காரணமாக சரி வர பணி செய்ய முடியாமல் இருந்த சதீஷை, பணியில் இருந்து நிர்வாகம் நீக்கியது.ஆனால், தனக்கு வேலை போக தினேஷ் தான் காரணம் என, அபிராமிபுரம் காவல் நிலையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றில், சதீஷ் புகார் அளித்தார்.இச்சம்பவம் குறித்து அபிராமிபுரம் போலீசார் விசாரித்தபோது, சதீஷ் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. அதனால், தினேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்அனுப்பி வைத்தனர்.எனினும், இரண்டு ஆண்டுகளாக வஞ்சம் தீராத சதீஷ், கேரளா மாநிலத்திற்கு சென்று கத்தி வாங்கியுள்ளார்.பின், சென்னை வந்த சதீஷ், தினேஷ் எங்கு பணிபுரிகிறார் என்பது தெரியாததால், பாண்டிபஜார், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு வங்கியாக அவரை தேடியுள்ளார்.இந்நிலையில், தி.நகரில்தினேஷ் பணிபுரியும் வங்கிக்கு சென்று, அவரை வெட்டியுள்ளார். மேற்கொண்டு விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.