உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.6 லட்சம் நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

ரூ.6 லட்சம் நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

சென்னை பெண் பயணி ஆட்டோவில் தவறவிட்ட, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் பாராட்டினர்.பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனிசெல்வி, 43. இவர், நேற்று முன்தினம் புரசைவாக்கம் செல்வதற்காக, 'கால் டாக்ஸி' செயலியான 'ஒலா'வில் ஆட்டோ பதிவு செய்தார்.பழைய வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 40, என்பவர், முற்பகல் 11:00 மணிக்கு வந்து, பழனிசெல்வி அவரது 11 வயது மகளையும் ஏற்றிச் சென்று, புரசைவாக்கத்தில் இறக்கியுள்ளார்.அப்போது, பழனிசெல்வி பையை மறந்து, ஆட்டோவிலேயே விட்டுச் சென்றார். பிற்பகல் 2:00 மணிக்கு ஞாபகம் வரவே, ஆட்டோ ஓட்டுநர் சரவணனை தொடர்பு கொண்டு, பையை தவறவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.ஆட்டோ ஓட்டுநர் சரவணன், பையை எடுத்து பார்த்தபோது, இரண்டு பட்டுப்புடவை, நெக்லஸ், ஆரம் போன்ற தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பழனிசெல்விக்கு தகவல் தெரிவித்து விட்டு, நகை அடங்கிய பையை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஒப்படைத்தார்.போலீசார் பழனிசெல்வியை காவல் நிலையம் வரவழைத்து, ஆட்டோவில் தவறவிட்ட பையில் இருந்த, 8 சவரன் நகைகள், இரு பட்டுப் புடவைகளையும் பத்திராக ஒப்படைத்தனர். இவற்றின் மதிப்பு 6 லட்சம் ரூபாய். நேர்மையுடன் நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் சரவணனை, போலீசார் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !