சென்னை:சென்னை, புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையிலான, 839 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டமான, ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய பாதை திட்டத்துக்கு, நடப்பு மத்திய பட்ஜெட்டில், 4.27 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை சொற்பமே என்பதால், ஆரம்பகட்ட பணிகளை முடிக்கவே மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன.குறிப்பாக, சென்னையை ஒட்டி அமைந்துள்ள, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளன.தவிர, தாம்பரம், ஆவடி ஆகியவை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், சில வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. இது, பயணிருக்கு போதுமானதாக இல்லை.தவிர, போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய, ரயில் போக்குவரத்து வசதிக்கான பணிகள், இன்னும் துவங்காமல் இருக்கின்றன.இந்நிலையில், பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீ., துாரம் புது ரயில் பாதை அமைக்கப்படும் என, 2013ல் அறிவிக்கப்பட்டது. திட்டத்தின் இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே, 2022ல் டெண்டர் வெளியிட்டது.தொடர்ந்து இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம், 839 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும் அப்போது, போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கவில்லை. கடந்த 2023 - 24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஆரம்பக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2024 - 25ல் 4.27 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை வைத்து, ஆரம்பகட்ட பணிகள் முடிக்கவே மேலும் தாமதம் ஏற்படும் என்பதால், இந்த திட்டப்பணி முடித்து செயல்பாட்டுக்கு வர, பல ஆண்டுகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, புறநகர் ரயில் பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க செயலர் பாஸ்கர் கூறியதாவது:புறநகர் பகுதிகளில் மக்கள் தொகையும், குடியிருப்புகளும் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டம், சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகள், தொழிற்சாலைகளை இணைக்கும் முக்கியமான திட்டம்.ஆனால், அறிவித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. திட்டப்பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.மாநில அரசு உதவியுடன் போதுமான நிலத்தை கையகப்படுத்தி, இந்த திட்டத்தை விரைவுப்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, ஆவடியில் இருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், கிளாம்பாக்கம் செல்வோர், மாநகரின் உள்ளே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நெரிசலில் சிக்காமல், அவரவர் பகுதிக்கு விரைவாக செல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழக அரசு உதவி தேவை
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரியை இணைக்கும் வகையில் புதிய பாதை திட்டத்தை செயல்படுத்த, பெரிய அளவில் நிதி தேவை. ஒட்டுமொத்த நிதியையும் ரயில்வே ஒரே நேரத்தில் ஒதுக்க முடியாது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை கொண்டு, நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வோம். உடனடியாக நிதி தேவைப்பட்டால், வேறொரு திட்ட நிதியையும் இதற்காக பயன்படுத்த தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது. தமிழக அரசு இணைந்து பங்களிப்பு செய்தால், இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முடியும்.- தெற்கு ரயில்வே அதிகாரிகள்திட்டத்தை
விரைவுபடுத்த
வேண்டும்
சென்னை, புறநகர் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதிய ரயில் போக்குவரத்து வசதி இல்லை. முக்கிய பகுதிகளை இணைத்து, புதிய ரயில் வழித்தடங்களை உருவாக்கினால் தான், சொந்த வாகனங்களின் பயன்பாடு குறைந்து, பொது போக்குவரத்து வசதியை மக்கள் பயன்படுத்துவர்.ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டம், சென்னை புறநகரில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பயணியரை இணைக்க முடியும்.ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பரந்துார் புதிய விமான நிலையம் மற்றும் காஞ்சிபுரத்தை இணைக்கும் வகையிலும், இந்த ரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்தலாம். இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர்.- முருகையன்,தலைவர், திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்கம்
தொழிற்சாலை பகுதிகள் பயனடையும்
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சாலை போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், ரயில் போக்குவரத்துக்கு வசதி வந்தால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள மக்கள் பயனடைவர். சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துார் பகுதியில் அமைய இருக்கிறது. விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில், ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என, காஞ்சிபுரம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு செங்கல்பட்டு வழியாக தான் ரயிலில் செல்ல முடிகிறது. ஸ்ரீபெரும்புதுாருக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டால், காஞ்சிபுரம் வரை அவற்றை நீட்டிக்க, மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது, காஞ்சிபுரம் மக்களின் கோரிக்கை.