ஆவடி மாநகராட்சியில் 4 நாளில் ரூ.55 லட்சம் வரி வசூல்
ஆவடி, ஆவடி மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 48 வார்டில் 89,488 பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் 81.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், 2025 - 26 நிதி ஆண்டுக்கான சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை, 1500க்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்தி உள்ளனர். இதன் வாயிலாக, நான்கு நாட்களில், 55 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, பட்டாபிராம், சத்திரம் வரி வசூல் மையத்தில் கணினியில் கோளாறு ஏற்பட்டதால், பலர் வரி கட்ட முடியாமல் தவித்தனர். பின், நீண்ட நேரம் காத்திருந்து வரி செலுத்தி சென்றனர். வயதானோர் மற்றும் வேலைக்கு செல்வோர் வரி செலுத்த வருவதால், தொழில்நுட்ப காரணங்கள் கூறி அலைக்கழிக்காமல், அனைத்து வரி வசூல் மையத்திலும், வெயிலை சமாளிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.