பூட்டிய வீட்டை குறிவைத்து திருடிய பெங்களூரு கர்ப்பிணிக்கு காப்பு
குமரன் நகர், பூட்டிய வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடி வந்த கர்ப்பிணியை, குமரன் நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.குமரன் நகர், முருகேசன் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன், 38. இவரது தாய் வீட்டின் தரை தளத்திலும், பாலமுருகன் முதல் தளத்திலும் வசிக்கின்றனர்.கடந்த 1ம் தேதி, வீட்டை பூட்டிய பாலமுருகனின் தாய், மறைவான இடத்தில் சாவியை வைத்து சென்றார். பின் திரும்பி வந்து பார்த்தபோது சாவி மாயமானது தெரிந்தது. பீரோவில் இருந்த 3.3 சவரன் நகை, 30 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. குமரன் நகர் போலீசார், வீட்டின் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி, 35, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், மின்சார ரயில்கள் வாயிலாக மாம்பலம், சைதாப்பேட்டை என எதாவது ஒரு ரயில் நிலையத்தில் ஜெயந்தி இறங்கி, அங்கு பூட்டப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரிந்தது. ஜெயந்தி ஐந்து மாத கர்ப்பிணி என்பதால் பெரியளவில் யாரும் சந்தேகம் வரவில்லை. வீடு புகுந்து திருடிய பின், ரயில் வாயிலாக பெங்களூர் சென்றுவிடுவது வழக்கம்.கடந்த இரு மாதங்களில், சைதாப்பேட்டை, மாம்பலம், குமரன் நகர் உட்பட நான்கு பகுதிகளில், பூட்டிய வீட்டில் புகுந்து ஏராளமான நகை, பணம் திருடியதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.