ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த ரூ.5 லட்சம் போலீசில் ஒப்படைத்த பைக் மெக்கானிக்
சென்னை: ஏ.டி.எம்., மையத்தில் கேட்பாரற்று கிடந்த 5 லட்சம் ரூபாயை மீட்டு, போலீசில் ஒப்படைத்த பைக் மெக்கானிக்கை போலீசார் பாராட்டினர். சென்னை, கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், அபிராமி அவென்யூவைச் சேர்ந்தவர் கண்ணன், 36. இவர், அபிராமி அவென்யூ 1வது தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் எதிரில், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று மாலை ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க செல்லும்போது, ஏ.டி.எம்., மையத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டின் 10 கட்டுகள் கேட்பாரற்று கிடந்துள்ளன. அவற்றை எடுத்த கண்ணன், கொடுங்கையூர் போலீஸ் உதவி ஆய்வாளர் முரளியிடம் ஒப்படைத்தார். கொடுங்கையூர் போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம்.,மில் நேற்று காலை பணம் நிரப்ப வந்த வங்கி ஊழியர்கள், பணத்தை விட்டு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஏ.டி.எம்., மையத்தில் கேட்பாரற்று கிடந்த 5 லட்ச ரூபாயை எடுத்து வந்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த கண்ணனை போலீசார் பாராட்டினர்.