உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் கலப்பை தடுக்க அவகாசம் தீர்ப்பாயத்தில் கேட்கிறது வாரியம்

கழிவுநீர் கலப்பை தடுக்க அவகாசம் தீர்ப்பாயத்தில் கேட்கிறது வாரியம்

சென்னை: மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து தடுக்க, போதிய கால அவகாசம் தேவை என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், சென்னை குடிநீர் வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 'கே.கே.நகர் பகுதியில் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். 'எம்.ஜி.ஆர்., நகர் பகுதி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, சென்னை கே.கே.நகர் குடியிருப்போர் நலச்சங்கம், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, சென்னை குடிநீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கை: மழைநீர் வடிகால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்க, குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைதாப்பேட்டையில் இருந்து நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, கழிவுநீர் கால்வாய்கள் விரிவாக்கம் செய்யும் பணிகள், 31.30 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் மோட்டார் வைத்து பம்பிங் செய்து, எம்.ஜி.ஆர்., கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது. கே.கே.நகர் பகுதியில் விஜயராகவபுரம், ராஜமன்னார் சாலை, பி.டி.ராஜன் சாலை ஆகிய இடங்களில் சேதமடைந்த கழிவுநீர் குழாய்கள் கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளன. சேதமடைந்த கழிவுநீர் குழாய்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., கால்வாய் மறுசீரமைப்பு பணி நவம்பரில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மழைநீர் கால்வாயில், கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து, சரி செய்ய போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இப்பிரச்னைக்கு முறையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி