நடைபாதையில் மோதிய புல்லட் பைக்: வாலிபர் பலி
தரமணி:தரமணியில் நடந்த விபத்தில், 'புல்லட்' பைககின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் பலியானார்.செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 25. போரூரில் தங்கி காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு படித்து வருகிறார்..இவரது நண்பர் அம்ருதீன், 25; தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மற்றொரு நண்பர் மடிப்பாக்கத்தில் உள்ளார். நேற்றுமுன்தினம், நண்பரை பார்த்து விட்டு, நேற்று அதிகாலை இருவரும் 'புல்லட்' பைக்கில், இ.சி.ஆரில் கடற்கரைக்கு சென்றனர். பின், கிண்டி நோக்கி ஓ.எம்.ஆர்., வழியாக புறப்பட்டனர்.அம்ருதீன் வாகனத்தை ஓட்டினார். வசந்தகுமார் பின்னால் அமர்ந்திருந்தார். தரமணி, தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லுாரி அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நடைபாதையில் மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். வசந்தகுமார் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயமடைந்த அம்ருதீன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.