பஸ்சில் பயணியரிடம் தகராறு ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்
சென்னை, சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இரு தினங்களுக்கு முன் நண்பர்களுடன், கிளாம்பாக்கம் - -கண்ணதாசன் நகர் செல்லும் தடம் எண்: 170 டி.எக்ஸ்., பேருந்தில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏறினார். டிக்கெட் எடுப்பதற்காக ஜெகநாதன், தன் 'ரூபே' அட்டையை கொடுத்துள்ளார். இயந்திரத்தில் கார்டு வேலை செய்யவில்லை. இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், திருமங்கலம் அருகில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது, ஜெகநாதன் மற்றும் அவரது நண்பர் படிக்கட்டில் இறங்கும் போதே நடத்துநர் விசில் அடிக்கவே, பேருந்தில் தானியங்கி கதவு திடீரென மூடியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். உடனடியாக ஜெகநாதன், சென்னை போலீசுக்கு 'ஆன்லைன்' மூலம் புகார் செய்தார். டிக்கெட் மற்றும் புகார் நகலை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகம் சம்பந்தப்பட்ட தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.