விரைவு ரயிலில் சிக்கிய கஞ்சா
திருவொற்றியூர், ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து, கூடூர், கொருக்குப்பேட்டை வழியாக, எர்ணாகுளம் நோக்கி செல்லும் விரைவு ரயில், நேற்று முன்தினம் மதியம், திருவொற்றியூர் ரயில் நிலையம் வந்தது.அங்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறி, திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், ஒரு பை கேட்பாரற்று கிடந்துள்ளது.இது குறித்து ரயில்வே போலீசார் பயணியரிடம் விசாரித்தனர். யாரும் உரிமை கோராத நிலையில், பையை திறந்து பார்த்துள்ளனர். அதில், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், கஞ்சா கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து, விசாரிக்கின்றனர்.