அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை தாராளம்
படப்பை:படப்பை அருகே அடுக்குமாடி குயிருப்பில் கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படப்பை அருகே நாவலுாரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து வசித்தவர்களுக்கு இங்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு, 2,000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. குற்ற பின்னணியில் உள்ள பலர் இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் மூலம் அருகில் உள்ள கிராம பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை தடையின்றி நடக்கிறது. இவற்றை தடுக்க வேண்டிய மணிமங்கலம் போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். கஞ்சா விற்பவர்கள் மீது தாம்பரம் மாநகர காவல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.