நோயாளி வீட்டில் ஐ - போன் திருடிய பராமரிப்பாளர் கைது
ராயபுரம், மயிலாப்பூர், சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பிலால், 32. இவரது மாமா இப்ராகிம் ஷா, ராயபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இப்ராகிம் ஷாவை கவனித்துக் கொள்ள, முகமது பிலால் தனியார் நிறுவனம் மூலம் பாலச்சந்தர் என்பவரை, பராமரிப்பாளராக நியமித்துள்ளார்.கடந்த 3ம் தேதி முதல், பாலச்சந்தர் அங்கு தங்கி இப்ராகிம் ஷாவை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், 15ம் தேதி விடுப்பு எடுத்த பாலச்சந்தர், அதன்பின் பணிக்கு வரவில்லை. அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதனால் சந்தேகமடைந்த முகமது பிலால், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார். அப்போது, ஐபோன், ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் 9,000 ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது.இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து, திருவாரூர், நெம்மேலியைச் சேர்ந்த பாலச்சந்தர், 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.