மத்திய குற்றப்பிரிவு ஏட்டு துாக்கிட்டு தற்கொலை
ஆலந்துார்:குடும்பத்தை கேரளாவில் விட்டு சென்னை திரும்பிய மத்திய குற்றப்பிரிவு ஏட்டு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை மாநகர காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தவர் சந்திரமோகன், 46. இவர், மனைவி ஜெனிபர், 42, மற்றும் 19, 10 வயது மகள்களுடன், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த வாரம், குடும்பத்துடன் திருமண நிகழ்வு ஒன்றுக்கு சொந்த ஊரான கேரளா சென்ற சந்திரமோகன், திருமணம் முடிந்த நிலையில், மனைவி, மகள்களை அங்கேயே விட்டு, இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்ற ஜெனிபர், பலமுறை அழைத்தும் அழைப்பை எடுக்காததால், பக்கத்து வீட்டாரை அழைத்து பார்க்க சொல்லியுள்ளார். வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், கதவை உடைத்து பார்த்தபோது, சந்திரமோகன் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரமோகனின் தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்னையா அல்லது அலுவல் பணிச்சுமையா என்ற கோணத்தில், பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.