உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய ஜூனியர் தடகள போட்டி சென்னை வீராங்கனையர் அசத்தல்

தேசிய ஜூனியர் தடகள போட்டி சென்னை வீராங்கனையர் அசத்தல்

சென்னை:தேசிய தடகள போட்டியில், தமிழக அணியில் இடம்பெற்றுள்ள சென்னை வீராங்கனையர், தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், 40வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி துவங்கி உள்ளது. ஒடிசா மாநில தடகளச் சங்கம் மற்றும் இந்திய தடகளச் சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டியில், நாட்டின் 2,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். முதல் நாள் போட்டியில், தமிழக அணியில் இடம்பெற்றுள்ள சென்னை வீராங்கனை சுபதர்ஷினி, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், போட்டி துாரத்தை 11.94 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு சென்னை வீராங்கனையான ஆர்த்தி, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 'ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்' உள்ளிட்ட போட்டிகள் அடங்கிய 'டிரையத்லான்' போட்டியில் 3,147 புள்ளிகள் பெற்று, தங்கம் கைப்பற்றி அசத்தினார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. அதேபோல், ஆண்களில் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், போட்டித் துாரத்தை 6.95 வினாடிகளில் கடந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் அபினந்த், புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், 2024ல் புவனேஸ்வர் மாநிலத்தில் நடந்த ஓட்டப் பந்தய போட்டியில் ராஜ் என்ற வீரர் 6.99 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை