சென்னை : ''உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டை மூடிமறைத்து, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுகின்றனர்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கானவை, எவை தனித் தொகுதிகள், எவை பொதுத் தொகுதிகள் என்ற விவரங்கள் செய்தியாக வரவில்லையே? அரசின் சார்பில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டதாக மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விவரங்கள் ஆளுங்கட்சிக்கு மட்டும் தரப்பட்டு, அந்தக் கட்சியின் சார்பில் அதற்கேற்ப வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த விவரங்கள் தெரியாத காரணத்தால், அந்தந்த தொகுதி மக்கள் கூட, தங்கள் தொகுதி எந்த வகையாக பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தொகுதிகளின் வகை குறித்த விவரம் தெரியாமலேயே, போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களை பெற்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. தோழமை கட்சிகளை கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது போல, ஒட்டுமொத்த தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆளுங்கட்சி கருதுகிறது.
அதன் அடையாளமாகத்தான், எந்தெந்த தொகுதிகள் எந்த பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை, ஏடுகள் வாயிலாக வெளியிடாமல் மூடிமறைத்து வைத்திருக்கிறது. நில அபகரிப்பு வழக்குகளில் காவல் துறையினர் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகிறதே? இதைபற்றி, 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியாகியுள்ளது. புகார் அளித்தவரையும், குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருமானம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது, சக போலீஸ் அதிகாரிகளே அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் நேரு மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே? திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நேரு நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்த்தே, அவர் மீது தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து, கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.