சென்னை : 'சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் கட்டப்படும் குடியிருப்புகளில், பள்ளி மற்றும் அங்கன்வாடி வசதிகள் ஏற்படுத்தப்படும்' என, ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதாடிய அட்வகேட் - ஜெனரல் உறுதியளித்தார்.இதையடுத்து, பெரும்பாக்கத்தில் அரசு செயல்படுத்தி வரும் வீடு கட்டும் திட்டத்தை மாற்றி அமைக்க கோரிய மனு நிலுவையில் வைக்கப்பட்டது.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனு: பெரும்பாக்கத்தில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு, ஆறு வயதுக்கு கீழான குழந்தைகள், 16 ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும். 108 அங்கன்வாடி மையங்கள் தேவைப்படும். ஆனால், 20 அங்கன்வாடி மையங்களுக்கு தான், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், 27 ஆயிரம் இருக்கும். குறைந்தது 14 பள்ளிகள் தேவைப்படும். ஆனால், மூன்று நர்சரி பள்ளிகள், ஐந்து தொடக்கப் பள்ளிகள், இரண்டு மேல்நிலைப் பள்ளிகள், இரண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது போதுமானதாக இல்லை. எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும். 5,000 வீடுகளுக்கு மிகாமல் கட்டுவதற்கு, திட்டத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களுக்கும் அடிப்படை வசதிகளை உள்ளடக்கி, வெவ்வேறு இடங்களில் கட்ட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:உள்கட்டமைப்பு வசதிகள்மற்றும் இதர வசதிகளை வழங்குவது குறித்து, பின்னர் விரிவாக பரிசீலிக்கலாம்.இந்த ரிட் மனு நிலுவையில் வைக்கப்படுகிறது. இதற்கிடையில், கட்டுமானத்தை தொடரலாம். குழந்தைகளுக்கு பள்ளிமற்றும் அங்கன்வாடி வசதிகள் அளிக்கப்படும் என, அட்வகேட் - ஜெனரல் தெரிவித்துள்ளார். இவ்வாறு இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.