உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணகி நகர் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உயர்நிலை குழு : தலைமை செயலர் உத்தரவு

கண்ணகி நகர் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உயர்நிலை குழு : தலைமை செயலர் உத்தரவு

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளின் தீர்வுக்கு, தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், சாலையோரங்களிலும், ஆற்றோரங்களிலும், புறம்போக்கு இடங்களிலும் சொந்த வீடின்றி வசித்துவந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களை குடியமர்த்த, துரைப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், 1998ல் கட்டியது. இப்புதிய குடியிருப்புகளை, 2000ம் ஆண்டு திறந்து வைத்து இப்பகுதிக்கு கண்ணகி நகர் என அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயரிட்டார்.நகரின் மையப்பகுதிகளில், குடிசைப்பகுதிகளில் இருந்தவர்களை, இதே அளவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாகக் கூறி அரசு நிர்வாகம் இங்கு குடியமர்த்தியது. முதலில் சென்னையில் மேம்பால ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டபோது ஆற்றோரங்களில் இருந்த ஏராளமான குடும்பங்கள், கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டன.

22 ஆயிரம் வீடுகள்: துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில், 22 ஆயிரம் வீடுகளைக் கொண்ட குடியிருப்புகளை குடிசை மாற்று வாரியம் கட்டியது. இதில் பெரும்பாலான குடியிருப்புகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான, போதிய சாலை, குடிநீர் வினியோகம், கழிவு நீர் வடிகால், மின்சாரம், தெரு விளக்குகள், திட கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. இந்நிலையில், 2004ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களையும் இங்கு குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களுக்காக, இங்கு கூடுதலாக, 31 ஆயிரத்து, 912 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஆய்வு: இத்திட்டங்கள் குறித்து கடந்த ஜூலையில் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார். அப்போது, அடிப்படை வசதிகள் தொடர்பாக இங்கு நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண, உயர்நிலை குழு அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், உயர்நிலைக்குழு அமைப்பது குறித்த வரைவு அறிக்கையை குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர், ஜூலை 22ம் தேதி அனுப்பினார்.

குழு அமைப்பு: இதை ஏற்று, உயர்நிலைக்குழு அமைப்பது தொடர்பான அரசாணையை, தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி அண்மையில் பிறப்பித்தார். இதன்படி, தலைமைச் செயலரைத் தலைவராக கொண்ட குழுவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் நிர்வாக இயக்குனர் ஒருங்கிணைப்பாளராகவும், 16 துறைகளின் செயலர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி என்ன? ''பல்வேறு துறை உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழு, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, அந்தந்த துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து முடிவு செய்ய உள்ளனர். இதற்காக, இக்குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது,'' என, பெயர் குறிப்பிட விரும்பாத குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- வி.கிருஷ்ணமூர்த்தி -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை