யு - 25 மாநில கிரிக்கெட் பைனலில் செங்கை அணி
சென்னை:மாநில கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு அணி வலுவான வெற்றியை பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், மாவட்டங்களுக்கு இடையிலான யு - -25 போட்டி, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. நேற்று திருநெல்வேலியில் நடந்த இரண்டாம் அரையிறுதி போட்டியில், செங்கல்பட்டு மற்றும் சேலம் அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த செங்கல்பட்டு அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 285 ரன்கள் குவித்தது. அணியின் வீரர் ஆர்யன் சஞ்சய் தாக்கரே, 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆதித்யா வரதராஜன் - 56, ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன் - 49, விஞ்ஞேஷ் எஸ்.அய்யர் - 47 ரன்களுடன் சிறப்பான பங்களிப்பு செய்தனர். வெற்றி இலக்கை துரத்திய சேலம் அணி, 30.2 ஓவர்களில், 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. சேலத்தின் சிவஜனா மட்டும் 45 ரன்கள் எடுத்தார். செங்கல்பட்டு பந்து வீச்சில், கே.கெவின் ரொமாரியோ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியுடன், செங்கல்பட்டு அணி, நாளை திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப் போட்டியில், திருவள்ளூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.