4 ஆ ண்டாக தொடரும் கால்வாய் பணி விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
சென்னை: நான்காண்டுகளாக மழைநீர் பணிகள் தொடரும் நிலையில், ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், வடகிழக்கு பருவ மழை துவங்கும்முன் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். சென்னையில் 2021 நவம்பரில் கனமழை கொட்டி தீர்த்ததால், பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதனால்,போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லாததே பாதிப்புக்கு காரணம் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைப்படி, 2022ம் ஆண்டு முதல் சென்னையில் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனுடன், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் புதைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கு அரசு, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் முடியவில்லை. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று, ஆழ்வார்பேட்டையில் தன் வீட்டின் அருகே நடந்து வரும், மழைநீர் வடிகால்வாய் பணிகளை திடீரென ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலத்தில், வி.ஐ.பி.,கள் அதிகம் வசித்து வரும் வீனஸ் காலனி, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்துாரி எஸ்டேட், சேஷாத்திரி தெரு ஆகிய இடங்களில், மழைநீர் தேங்காத வகையில், 10 தெருக்களில், 2.16 கி.மீ., நீளத்திற்கு, 8.21 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளையும், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, அமைச்சர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய இயக்குநர் வினய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.