கொளத்துாரில் முதல்வர் ஆய்வு
கொளத்துார்:'பெஞ்சல்' புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின், அவரது தொகுதியான கொளத்துாரில், நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். செல்வி நகர், நீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த அவர், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், சீனிவாச நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஜி.கே.எம்.,காலனி 21வது தெருவில், மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் குளத்தையும் அவர் பார்வையிட்டார். இறுதியாக, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''சென்னையில் வழக்கமாக மழை நீர் தேங்கும் இடங்களில் தற்போது தேங்கவில்லை. சென்னை தத்தளிக்கவும் இல்லை ; தப்பிக்கவும் இல்லை; நிம்மதியாக உள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கு ஓரளவு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது,''என்றார்.