பரங்கிமலையில் குளோரின் கசிவு கண் எரிச்சல், குமட்டலால் அவதி
பரங்கிமலை,: சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகில், ருத்ரா சாலையில் ராணுவ இன்ஜினியரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. அங்கு குடிநீரை சுத்திகரிக்கும் நிலையமும் உள்ளது. அதில், குளோரின் சிலிண்டரில் நேற்று திடீரென கசிவு ஏற்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்ரோடு மத்தியாஸ் நகர், யூரோப்பியன் லைன் ஆகிய பகுதிகளிலும் காற்றில் குளோரின் பரவியது. இதனால், அப்பகுதியில் வசிப்போருக்கு கண் எரிச்சல், இருமல், குமட்டல் போன்றவை ஏற்பட்டது.காரணம் தெரியாமல் பலரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். தகவல் அறிந்து, ராணுவ பொறியாளர் பிரிவு அதிகாரிகள், தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து கசிவு வரும் இடத்தில் தண்ணீரை பாய்ச்சினர். அரை மணிநேர போராட்டத்திற்கு பின் கசிவு சரி செய்யப்பட்டது.