| ADDED : பிப் 06, 2024 12:44 AM
பெரம்பலுார், ''-இந்தியாவிலேயே தலைசிறந்த பஸ் ஸ்டாண்டாக அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.பெரம்பலுாரில் அவர் அளித்த பேட்டி: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்குவது குறித்து, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிபதி உத்தரவிற்கிணங்க இருதரப்பு பேச்சு முடிவுற்று, அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கு முடிச்சூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் இந்தியாவிலேயே தலைசிறந்த பஸ் ஸ்டாண்டாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து பஸ்களையும் இயக்கினால் மட்டுமே பயணியருக்கு சிரமம் இருக்காது. தொடர்ந்து, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது குறித்து கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகிறது. அதன்படி, விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது கூட, எந்த ஒரு பஸ்சும் நிறுத்தப்படாமல் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. எனவே, அதிகளவில் காலி பணியிடங்கள் இல்லை. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஆள் எடுக்கும் பணியில் எழுத்து தேர்வுகள் முடிவுற்ற நிலையில், தற்போது நேர்முக தேர்வு நடந்து வருகிறது. அது முடிவற்ற பிறகு அவர்கள் பணியமர்த்தப்படுவர். இது மட்டுமின்றி தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கிவிட்டது. அது முடிவற்றவுடன் அவர்களும் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.