வீணாகும் மலர்கள் மறுசுழற்சி நிறுவனங்களை தேடுது சி.எம்.டி.ஏ.,
சென்னை, கோயம்பேடு அங்காடியில் வீணாகும் மலர்களை பயன்படுத்தி, புதிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தேடும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில் கோயம்பேடில், 86 ஏக்கர் பரப்பளவில் காய், கனி, மலர்களுக்கான மொத்த விற்பனை அங்காடி வளாகம், 1996ல் துவக்கப்பட்டது.இதில், அடிப்படை வசதிகளை பராமரிக்கும் பொறுப்பு, அங்காடி நிர்வாக குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் மொத்தம், 3,855 கடைகள் கட்டப்பட்டதில், 471 கடைகள் மலர் அங்காடியாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இதில், மலர் அங்காடி வளாகம் தனியாக செயல்படுகிறது. இங்கிருந்து தினசரி, 10 டன் அளவுக்கு வீணாகும் மலர்கள், கழிவுகளாக சேர்கின்றன. தற்போது இவை, பிற வகை குப்பை மற்றும் கழிவுகளுடன் சேர்த்து தான் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தினசரி விணாகும், 10 டன் மலர்களை பயன்படுத்தி, மறுசுழற்சி முறையில் புதிய பொருட்கள் தயாரிக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.இதற்கான அனுபவமுள்ள நிறுவனங்களை தேடும் பணிகளை, சி.எம்.டி.ஏ., முடுக்கி விட்டுள்ளது. கோயம்பேடு அங்காடி வளாகத்தில் வீணாகும் மலர்களை தினசரி அடிப்படையில் சேகரித்து, பதப்படுத்தி மாற்று பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை, வருவாய் பகிர்வு அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இதற்கு, பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்நிறுவனங்களின் தகுதி, செயல் திறன், முன் அனுபவம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இந்த விஷயத்தில் தேர்வு பணிகள் முடிக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.