முதுகில் நாமத்துடன் பிறந்த நாகப்பாம்பு
சென்னை:தரமணி கல்வி நிறுவன வளாகத்தில், முதுகில் நாமத்துடன் பிறந்த நாகப்பாம்பு சிக்கியது. ஓ.எம்.ஆர்., தரமணியில், மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், நாகப்பாம்பு உள்ளதாக வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாம்பு பிடிக்கும் ஊழியர்கள், உரிய உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். நீண்ட தேடலுக்கு பின், 2 அடி நீளத்தில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு சிக்கியது. வழக்கமாக, நாகப்பாம்பு தலையில் நாமம் இருக்கும். இதை வைத்து, நாகப்பாம்பு என அடையாளம் காண்பர். இந்த நாகப்பாம்பின் முதுகிலும் நாமம் இருந்தது. இதை, ஊழியர்கள் அதிசயமாக பார்த்தனர். பாம்பு, கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மரபணு காரணமாக, முதுகில் நாமத்துடன் பிறந்திருக்கிறது. இது, எப்போதாவது நிகழும். இதன் தாய்க்கு, இது போன்ற நாமம் இருக்காது என நினைக்கிறோம். இதன் குட்டிகளும் நாமத்துடனும் பிறக்கலாம். பிறக்காமலும் இருக்கலாம். இது ஒரு அரிய நிகழ்வு,'' என்றனர்.