கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
சென்னை:கல்லுாரி மாணவர், விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சபரீஸ்வரன், 19. இவர், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள 'அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி'யில், தோல் தொழில்நுட்ப பிரிவில் படித்து வந்தார். 'தனக்கு படிக்க விருப்பம் இல்லை; மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு, சொந்த ஊருக்கே போகப்போகிறேன்' என, நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்தார். நேற்று, சபரீஸ்வரன் மட்டும் விடுதியிலேயே இருந்தார். மதியம், 12:30 மணியளவில் விடுதிக்கு வந்த நண்பர்கள், கதவை வெகுநேரம் தட்டியும், சபரீஸ்வரன் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள், ஜன்னல் வழியே பார்த்தபோது, சபரீஸ்வரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே, கதவை உடைத்து உள்ளே சென்ற நண்பர்கள், அவரை மீட்டு விடுதி வளாகத்திலேயே உள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், படிக்க விருப்பம் இல்லாமல் இருந்ததும், அதிக பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்ததாலும் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.